ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள தூக்கநாயக்கன்பாளையம் வன சரகத்திற்குள்பட்ட குன்றி விளாங்கோம்பை, மல்லியம்மன் துர்கம், கம்மனூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையினால் வனப்பகுதி காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வனத்தையொட்டி அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து முழுகொள்ளவான 42 அடியை எட்டி அணை நிரம்பியது.
குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பியது அதனால் அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடிக்கும் மேல் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், கள்ளியங்காடு வினோபாநகர், தோப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கும் மேடான பகுதிக்கும் செல்லுமாறு அறிவுறத்தப்பட்டுள்ளனர். குண்டேரிப்பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையில் மீன் பிடிக்கவோ துணி துவைக்கவோ கால்நடைகள் மேய்க்கவோ இறக்கவோ தடைவித்துள்ளனர்.
பலத்த மழையால் குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது குண்டேரிப்பள்ளம் அணை முழு கொள்ளளவு 42 அடி என்ற போதும் அணை தூர்வாரப்படாமல் உள்ளதால் பாதியளவு சேரும் சகதியுமாக உள்ளதாகவும் ஒவ்வொரு ஆண்டும் அணையிலிருந்து சுமார் 1 டி.எம்.சி தண்ணீர் வீணாக பவானி ஆற்றில் கலப்பதாகவும் அதனால் அணையை தூர் வாரி தண்ணீர் நிரம்பும் பகுதியை உயர்த்தவேண்டும் எனவும், தற்போது உபரிநீர் ஓடையில் மூன்று தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். விரைந்து தடுப்பணைகள் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.