ஈரோடு: மொடக்குறிச்சி அருகே உள்ள முத்துகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எட்டு நபர்கள் இன்று (நவ.19) காலை ஆம்னி வாடகை காரில் பழனி முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி அருகே செல்கையில், எதிரே வந்த சிமெண்ட் லாரியில் மோதி கார் சுக்குநூறானது. இதில் ஓட்டுநர் படையப்பா, காரில் வந்த தெய்வானை, மஞ்சுளா, அருக்காணி, தேன்மொழி என நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகினர்.
காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து மேலும், காரில் வந்த குமரேசன், மோகன்குமார், முத்துசாமி ஆகிய மூன்று நபர்களும் காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஈரோடு டவுன் டிஎஸ்பி., மோகனசுந்தரமும், சிவகிரி காவல் துறையினரும் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கிருந்த உடல்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இந்த இடத்தில் ஏற்கெனவே நிறைய விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறியும், சாலையை அகலப்படுத்தியோ அல்லது வேகத்தடை அமைத்தோ தர வேண்டுமெனவும் கோரி அப்பகுதி மக்கள் டிஎஸ்பி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:சென்னையில் போக்குவரத்தை கட்டுப்படுத்த சிறப்புபடை - உயர்நீதிமன்றம்