ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி, முல்லை உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
மல்லிகை செடிகளுக்கு பூச்சி தாக்குதல் அதிகம் என்பதால் 5 நாள்களுக்கு ஒரு முறை பூச்சி மருந்து தெளிக்க வேண்டியது கட்டாயம் இருக்கிறது. சாதாரண ஸ்ப்ரேயர் மூலம் பூச்சி மருந்து தெளிக்க ஒரு ஏக்கருக்கு 3 மணிநேரம் ஆவதோடு ஆள் கூலி உள்ளிட்ட செலவினமும் அதிகளவு ஏற்படுகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பூச்சி மருந்து உற்பத்தி நிறுவனம், அதிநவீன பூம் ஸ்ப்ரேயர் என்ற மருந்து தெளிக்கும் இயந்திரம் ஒன்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. 15 நிமிடங்களில் ஒரு ஏக்கர் மல்லிகை செடிக்கு பூச்சி மருந்து தெளிக்கும் அதிநவீன தொழிட்நுட்பத்தைக் கொண்ட இந்த அதிநவீன பூம் ஸ்ப்ரே இயந்திரமானது 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் கொண்டிருக்கிறது.
இத்தகைய அமைப்பால், ஒரே நேரத்தில் 4 ஏக்கர் பரப்பளவுக்கு தேவையான மருந்துவரை நீரில் கலந்து பயன்படுத்த முடியும். அதேபோல, 8 மீட்டர் அகலம்வரை ஹைட்ராலிக் முறையில் பூச்சிமருந்து தெளிப்பதால் மருந்து தெளிப்பதற்கான ஆள் கூலி செலவு குறைவதோடு நேரமும் மிச்சப்படுத்தலாம் என அறியமுடிகிறது.
மல்லிகை, முல்லை, சூரியகாந்தி போன்ற மலர் சாகுபடிக்கு மட்டுமல்லாது பருத்தி, நெல், மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கும் மருந்து தெளிக்க முடியும் என அந்நிறுவனம் கூறுகிறது.
அதிநவீன பூம் ஸ்ப்ரேயரை 50 % மானிய விலையில் அரசு வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சத்தியமங்கலம் விவசாயிகள்,“ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரத்தை விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல் துறை சார்பில் இது போன்ற அதி நவீன இயந்திரங்களை வாங்கி குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க :குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குனர் பா.ரஞ்சித் எதிர்ப்பு!