ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் அருகே உள்ள செங்கோடம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயியான இவருக்கு நாராக்காட்டு தோட்டம் என்ற இடத்தில் ஆறு ஏக்கர் நிலம் உள்ளது. பொன்னுசாமிக்கு நான்கு எருமைகள் உள்ளன.
அனுதினமும் இந்த நான்கு எருமைகளை வளர்த்துவரும் பொன்னுசாமி அதன் மூலம் கிடைக்கும் பாலை விற்பனை செய்து பிழைப்பு நடத்திவந்துள்ளார்.
இவரது தோட்டத்தின் அருகே உள்ள அவர் உறவினர் செல்வராஜ் என்பவரின் தோட்டத்தின் இடையே உள்ள பாதைவழி யாருக்கு என்ற பிரச்னை கடந்த சில வருடங்களாக இருந்து வந்துள்ளது.
இதனிடையே மே மாதம் பொன்னுசாமி ஊரில் இல்லாத நேரத்தில், பாதைவழி தொடர்பாக செல்வராஜ் பொன்னுசாமியின் குடும்பத்திடம் தகராறில் ஈடுபட்டு, சிலரை தாக்கி உள்ளார்.
இதில் படுகாயமடைந்த பொன்னுசாமியின் தாயார் வள்ளியம்மாள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்தச் சம்பவத்தின்போது, பொன்னுசாமியின் எருமை ஒன்றின் கண்ணில் இரும்புக் கம்பியைக் கொண்டு செல்வராஜ் ஈவு இரக்கமின்றி குத்தினார். இதனால், எருமை வலி தாங்கமுடியாமல் மரண ஓலமிட்டது. இந்தத் தாக்குதலில் எருமையின் ஒரு கண் முழுவதும் பறிபோய்விட்டது.
பாதிக்கப்பட்ட எருமை மாட்டின் விவசாயி பொன்னுசாமி கடும் வலியால் அவதிப்பட்டுவரும் எருமை உணவு உட்கொள்ள முடியாமல் சிரமப்பட்டுவருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொன்னுசாமி புகார் அளித்துள்ளார்.