ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வார்கள். அதோபோல ஆண்டுதோறும் நடக்கும் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த குண்டம் விழா கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மார்ச் 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.
அதைத்தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி குண்டம் விழா கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களிலிருந்துலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் மிதித்தனர். இதைத்தொடர்ந்து தினந்தோறும் கோயிலில் புஷ்ப ரத ஊர்வலம், மஞ்சள் நீராடுதல், திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடந்தன. இந்த நிலையில் நேற்று (மார்ச் 28) மறுபூஜையுடன் குண்டம் விழா நிறைவு பெற்றது.