ஈரோடு: நேதாஜி தினசரி காய்கறிச் சந்தை சங்கம் 2000ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தச் சங்கம் ஈரோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் அதிமுகவின் பிரமுகர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 800 சதுர அடியில் வீட்டுமனை நிலம் வாங்கித் தருவதாகக் கூறி இவர்கள் பணம் வசூல்செய்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு உறுப்பினரிடமும் நிலத்திற்காக ரூ.50 ஆயிரம், அரசு ஒப்புதலுக்காக ரூ.20 ஆயிரம் வீதம் சுமார் ரூ.2 கோடி வசூல் செய்துள்ளனர்.
இத்திட்டத்திற்காக, மொத்தம் உள்ள 800 உறுப்பினர்களில் 350-க்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டி ரசீது பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து சங்கப் பொறுப்பாளர்கள் 2016ஆம் ஆண்டு ஈரோடு அருகே உள்ள நசியனூர் பகுதியில் 20½ ஏக்கர் நிலத்தை வாங்கி அவர்களது பெயரிலும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
பின்னர் சங்க உறுப்பினர்களுக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுக்காமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் மோசடி செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து பணம் செலுத்திய சங்க உறுப்பினர்கள், இது பற்றி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் செய்தனர்.
புகாரின்பேரில், நேதாஜி தினசரி காய்கறிச் சந்தை சங்கத் தலைவரும், அதிமுக பெரியார் நகர் மாவட்டப் பிரதிநிதியுமான பி.பி.கே. பழனிச்சாமி, சங்கச் செயலாளரும், அதிமுக கருங்கல்பாளையம் பகுதிச் செயலாளருமான முருகசேகர் என்கிற முருகநாதன், சங்கப் பொருளாளரும், அதிமுக வார்டு செயலாளருமான வைரவேல், சங்கத் துணைத்தலைவரும், அதிமுக வார்டு செயலாளருமான குணசேகரன், சங்கத் துணைச் செயலாளரும், அதிமுக உறுப்பினருமான ஆறுமுகம் உள்பட அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் மீது குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வைரவேல், வினோத்குமார் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தற்போது சங்க துணைச் செயலாளர் ஆறுமுகம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக தொழிற்சங்க செயலாளரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள்!