ஈரோடு:பவானிசாகர், சத்தியமங்கலம், கொடிவேரி பகுதியில் தாழ்வான இடத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடி. தற்போது நீர் இருப்பு 32.8 டிஎம்சி ஆக உள்ளது. தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இதனால், அணைக்கு வரும் நீரின் அளவு 2,000 கன அடியிலிருந்து 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. 96.12 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 97.50 அடியாக உள்ளது.
அணை 100 அடியை எட்டும்போது அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்படும் என்பதால் பவானி ஆற்றின் கரையோரம் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு சத்தியமங்கலம் நகராட்சியினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல பவானிசாகர் பேரூராட்சி சார்பிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.