ஈரோடு: புதிய தொழில்நுட்ப உதவியுடன், பயிர்களுக்கு இயற்கையான மருந்து கரைசல்களை, விவசாயிகள் வயல்களுக்குத் தெளித்துவரும் நிகழ்வு அனைவரின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரங்களில் விவசாயம் பிரதான தொழிலாகும். கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்கள் மூலம், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது அனைத்து பாசன வாய்க்கால்களிலும் முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு, நெல் நடவுப்பணிகள் முடியுற்றுள்ளது. இச்சூழலில், களையெடுக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு முன்பாக நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகளிமிருந்தும், மயில்கள், எலிகளிடமிருந்தும் நெற்பயிர்களை பாதுகாக்க புது முயற்சியாக சிறிய ரக ட்ரோன் விமானம் மூலம் இயற்கை ஊட்டமான பஞ்சகவ்யம், பழச்சாறு, மூலிகைகள் அடங்கிய கரைசலை நெற்பயிர்கள் மீது தெளித்து வருகின்றனர்.
இதனால் பயிர்களை தாக்கும் பூச்சிகளை தடுக்கமுடியும் என்றும், பூஞ்சான் நோய் கட்டுப்படுத்தப்படுவதாகவும், நிலத்தின் சத்துக்கள் அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த கரைசலை ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லிட்டர் வீதம், 8 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கும்போது, எவ்வித நோயும் தாக்காமல் பயிர்களை பாதுகாக்க முடியும்.
மேலும், மயில், முயல், எலி, கிளி போன்றவைகளும் பயிர்களை சேதப்படுத்தாது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் 200 ஏக்கருக்கும் மேல் சிறிய ரக விமானம் மூலம் இயற்கை ஊட்டச்சத்து கரைசலை தெளித்துள்ளதாகவும், விவசாயிகள் நாள்தோறும் ஆர்வமுடன் இந்த இயற்கை கரைசல் வேண்டி பதிவுசெய்து வருவதாகவும், இயற்கை ஊட்டச்சத்து விநியோகம் செய்யும், அதன் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
தொழில்நுட்ப உதவியுடன் பயிர்களுக்கு இயற்கை உரமிடும் விவசாயிகள்! வேளாண்மையில் புதுப்புது மாற்றங்களை சந்தித்துவரும் விவசாயிகள் எதைப்பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு நஞ்சில்லா உணவு வழங்கமுடியும் என்பதை மனதில் கொண்டு, புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். தற்போது பெரும்பாலான விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறிவரும் நிலையில், சிறிய ரக விமானம் மூலம் இயற்கை ஊட்டச்சத்தை பயிர்களுக்கு அளிப்பதை விவசாயிகளும், பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.