சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியில் மலைகளுக்கு மத்தியில் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம் கிராமங்கள் அமைந்துள்ளன. அக்கிராமங்களைச் சுற்றிலும் மாயாறு ஓடுவதால் கிராமத்துக்கு வரும் போதும் போகும் போதும் மாயாற்றைக் கடந்து செல்ல வேண்டும். தற்போது கூடலூர், மசினக்குடி, பைகாரா, கிளன்மார்க்கன் ஆகியப் பகுதியில் கனமழை பெய்து வருவதால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளை தொட்டபடி வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது.
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: இருளில் மூழ்கிய கிராமங்கள் - வெள்ளப்பெருக்கு
ஈரோடு: பவானிசாகர் வனப்பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம் மாயாற்றில் 3-வது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம் என இரு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மக்கள் வெளியே செல்லமுடியாத நிலையில், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். தொடர்மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம் கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் இருளில் மூழ்கினர்.
தற்போது மின்சாரம் இல்லாததால், அவசரத்துக்குக்கூட செல்போனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்லாம்பாளையம் மக்கள் தெரிவித்தனர். தெங்குமரஹாடாவில் இருந்து பிற பகுதிகளுக்குச் செல்ல மாயாற்றில் பரிசல் இயக்கக்கூடாது என்பதால், தெங்குமரஹாடா கிராமத்தில் விளையும் காய்கறி, விளை பொருள்களை விற்பனை செய்யமுடியாமல் தேங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.