ஈரோடு மாவட்டத்தில் தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும், அரசின் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சியின் சார்பில் அனைத்து வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபார நிறுவனங்கள் முதல் பெரிய வியாபார நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், "ஈரோடு மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள அனைத்து வகை வியாபார நிறுவனங்களிலும் அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த விளம்பரப் பதாகைகள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அமைத்திட வேண்டும்.