ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம்.
கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்ததால், கடந்த ஏப்ரல் மாத இறுதி முதல் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
இன்று (ஜூலை. 5) முதல் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், கோயில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை பண்ணாரி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பு
கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு பொது தரிசன வரிசையில் தனிமனித இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்ய வரிசையில் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து அம்மனை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் பிரசாத விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
71 நாள்களுக்குப் பிறகு பண்ணாரி அம்மன் கோயிலில் மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் அம்மனை வழிபட்டுச் சென்றனர்.