ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஆலத்துக்கோம்பையில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்குத் தேவையான கரும்புகள் கர்நாடகாவிலிருந்து லாரிகள் மூலம் திம்பம் மலைப்பாதை வழியாக கொண்டு வரப்படுகிறது.
அப்படி லாரியில் ஏற்றப்படும் கரும்புகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகயிருப்பதால், ஆசனூர் காரப்பள்ளம் எனும் இடத்தில் உயரத்தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. அதனால் அதிகமாக கரும்பு ஏற்றிவரும் லாரி ஓட்டுநர்கள் உபரிக் கரும்புகளை செல்லும் வழியில் வீசி விட்டுச் செல்கின்றனர்.
அப்படி வீசப்படும் கரும்புகளை உண்ண வனப்பகுதியிலுள்ள யானைகள் அடிக்கடி சாலைக்கு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவிலிருந்து கரும்பு ஏற்றிவந்த லாரியின் ஓட்டுநர் மகேந்திரன், கிளீனர் விநாயகம் இருவரும் உபரிக் கரும்புகளை சாலையோரம் வீசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு யானைகள் கூட்டம் வந்தது.
புளிய மரத்தில் ஏறிய லாரி ஓட்டுநர், கிளீனர் அதனால் பயந்துபோன இருவரும் அருகிலிருந்த புளியமரத்தில் ஏறிவிட்டனர். யானைகள் அங்கிருந்து செல்லும் வரை, அவர்கள் மரத்திலேயே இருந்தனர். நீண்ட நேரம் யானைகள் செல்லாததால் அவ்வழியாக வந்த மற்றொரு கரும்பு லாரியை நிறுத்தச் சொல்லி, அதில் குதித்து அங்கிருந்து தொலைவாகச் சென்றனர். அதையடுத்து யானைகள் சென்ற பின் லாரியை அங்கிருந்து ஓட்டிச் சென்றனர்.
இதையும் படிங்க:சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானை: வாகன ஓட்டிகள் பீதி!