ஈரோடு மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வந்த நிலையில் கரோனா பரவலை தடுப்பதற்காக மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதனால் காய்கறி லாரிகளில் மதுபானங்கள் கடத்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்றவை அதிகரித்து வந்தன.
இதனையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுப்பதற்காக மதுவிலக்கு காவலர் மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் ராயர்பாளையத்தில் 50 பேர் கொண்ட தனிப்படையினர் திடீர் ரெய்டு நடத்தினர்.
இதில் ராயர்பாளையம் விவசாய நிலங்களில் குழிதோண்டப்பட்டு அதில் பிளாஸ்டிக் குடங்களில் ஊறல் அமைக்கப்பட்டு மறைத்து வைத்து தெரிய வந்துள்ளது. இதன்மூலம் மதுவிலக்கு போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்து வந்தபோது 10 இடங்களில் 50 லிட்டர் பேரலில் ஊறல் புதைக்கப்பட்டு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு தயாராக வைத்திருந்தனர்.
அதனைக் கண்டுபிடித்த காவலர்கள், குழியில் புதைக்கப்பட்ட ஊறல்களை தோண்டிஎடுத்து நிலத்தில் கொட்டி அழித்தனர். மொத்தம் சுமார் 850 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டதாக மதுவிலக்கு காவலர்கள் தெரிவித்தனர்.