ஈரோடு: தமிழ்நாடு-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ள வனச்சாலையில் வாகனங்களுக்கு இரவுநேரப்போக்குவரத்துத் தடை, 16.2 டன் எடைக்கு மேல் பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளுக்குத் தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வாகனப் போக்குவரத்து தடையை நீக்கக்கோரி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு நேற்று(ஏப். 11) பண்ணாரி சோதனைச்சாவடியில் லாரி உரிமையாளர்கள் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப்போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், அனைத்துக்கட்சியினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திம்பம் மலைப்பாதையில் வாகனப்போக்குவரத்து தடை காரணமாக லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பரிசீலனை செய்து, கனரக லாரிகளை அனுமதிக்க தமிழ்நாடு-கர்நாடக மாநில முதலமைச்சர்கள் இப்பிரச்னையில் தலையிட்டு வழக்கம்போல் கனரக வாகனங்களை இயக்க ஆவன செய்யவேண்டுமென லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.