உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை பல நாடுகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் கடந்த 8 மாதங்களாக ஈடுபட்டு தற்போது மருந்து கண்டுபிடிக்கப்பட்டு முழுமையாக பரிசோதனைகளில் வெற்றியடைந்த நாடுகள் அம்மருந்தினை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் இன்று கரோனா தடுப்பூசியை பிரதமர் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கோவிட்19 சிறப்பு தடுப்பூசி போடும் முகாமில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இந்த சிறப்பு முகாம் குறித்து அவர் பேசுகையில், ”மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தலைமை மருத்துவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மற்றவர்கள் அச்சமின்றி இந்த முகாமில் பங்கேற்பார்கள்” என்று தெரிவித்தார். அமைச்சரின் அறிவுரையை ஏற்று கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆனந்தன் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.