பொதுமக்களின் மனுக்களை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை! - மாவட்ட ஆட்சியர் அறிவுரை
ஈரோடு: கரோனா காலத்தில் மக்களுக்கான அனைத்து வகை கோரிக்கைகளையும் தாமதமின்றி நிறைவேற்ற அரசு அலுவலர்கள் தங்கள் பணியில் அக்கறை செலுத்திட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்க்கிராமங்களுக்கான வருவாய்த்தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கலந்து கொண்டார்.
இரண்டாவது நாளாக நடைபெற்ற வருவாய்த்தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, உழவர் பாதுகாப்பு திட்ட சலுகைகள், சாதிச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்ட மனுக்களை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து அதிகளவிலான பொதுமக்களின் மனுக்கள் மீது தீர்வு காணாமல் இருக்கும் அரசு அலுவலர்களைக் கண்டித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து வகை மனுக்களையும் முறையாக விசாரித்து தகுதியுள்ளவர்களுக்கு உடனடியாக தீர்வினை வழங்கிட வேண்டுமென்றும், கரோனா பேரிடர் காலத்தில் மக்கள் பயன் பெற்றிடும் வகையில், அவர்களது மனுக்களின் கோரிக்கைகளை
தாமதமின்றி நிறைவேற்றிட அனைத்துத் துறை அலுவலர்களும் தங்கள் பணியில் அதிகளவிலான அக்கறையினை செலுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
முன்னதாக, அவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட வருவாய்க் கிராமங்கள் பதிவேடு, பட்டா சிட்டா பதிவேடு, வரி வசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு, கிராமங்களின் பயிர் சாகுபடி பதிவேடு ஆகியவற்றை சரிபார்த்தார்.