ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.
முன்னதாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததை அடுத்து இந்த செங்கல் சூளைகள் முடங்கின. தற்போது இப்பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைந்துள்ளதால் செங்கற்கள் தயாரிக்கும் தொழில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அங்கு வேலை செய்பவர்கள் தெரிவித்தபோது, "இங்கு தயாரிக்கப்படும் செங்கற்கள் சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர், கோபிச்செட்டிப்பாளையம், நம்பியூர் உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த சில வாரங்களாக சத்தியமங்கலம், பவானிசாகர் வட்டாரத்தில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. தற்போது மழை குறைந்துள்ளதால் மீண்டும் செங்கல் சூளையில் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.