ஈரோடு:தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் பாஜக நெசவாளர் அணி சார்பில் விழா நடைபெற்றது. முன்னதாக 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்து அண்ணாமலை தலைமையில் தேசிய கொடியுடன் பேரணியாக வந்தனர். பின்னர் விழாவில் நெசவாளர் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து வீர வால் பரிசாக வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ‘மத்திய அரசு நெசவாளர் நலன் காக்க எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் திமுக அரசு பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை ரேஷன் கடை மூலம் ஏழை மக்களுக்கு விநியோகிக்க இதுவரை நூல் வாங்க டெண்டர் விடவில்லை’ என கூறினார்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலை மக்களுக்கு வழங்க ஜூலை முதல் உற்பத்தி துவங்கும். அப்போது தான் ஐந்து மாதங்கள் உற்பத்தி முடிந்து ஜனவரி மாதம் மக்களுக்கு வேட்டி சேலை வழங்கப்படும். ஒரு வேட்டி விலை 70 ரூபாய் மற்றும் சேலை விலை 200 ரூபாய் ஆகும். இதன் மூலம் நெசவாளர்கள் 486 கோடி பெறுவார்கள் ஆனால் வெளிமாநிலங்களில் இந்த வேட்டி சேலை வாங்கி அதனால் பத்திலிருந்து இருபது சதவீதம் கமிஷன் பெற திமுக திட்டமிடுகிறது.