ஈரோடு: மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என்ற போதிலும் அக்டோபர் மாத இறுதிவரை 102 அடி வரை நீர்த் தேக்க வேண்டும் என விதிமுறை உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 1 முதல் அணையின் நீர்மட்டம் 105 அடி வரை நீர் தேக்கிப் பராமரிக்கலாம் என்பதால் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயரத் தொடங்கிய நிலையில் மீண்டும் தற்போது பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.