ஈரோடு:பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையால், அணை வேகமாக நிரம்புவதைத் தொடர்ந்து நேற்று (ஆக.6) வினாடிக்கு 25 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பவானி ஆற்றங்கரையில் உள்ள சவுண்டப்பூர், அத்தாணி, காமராஜபுரம், கருவல்வாடிப் புதூர், கீல்வாணி, மூங்கில் பட்டி, கூத்தம்பூண்டி, ஆப்பக்கூடல், புதூர், தளவாய் பேட்டை, பவானி பழைய பேருந்து நிலையம் பகுதி வரை வெள்ளநீரானது கரையின் இருபுறங்களிலும் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் உள்ள கோயில்கள், வீடுகளை சூழ்ந்து தற்போது தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
மேலும் குப்பாண்டம்பாளையம், மேவாணி கூத்தம்பூண்டி ஊராட்சி சார்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 25 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் இன்னும் தளவாய்பேட்டை பவானி பஸ் நிலையம் பகுதிகளுக்கு சென்று சேரவில்லை.