ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று(மே 13) நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அதில், 'தமிழ்நாடு அரசின் முன்னேற்றம், பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து ஆண்டு காலமாக எண்ணம் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு காலங்களில் அரசியல் கட்சிகள் பாராமல் அனைத்துக் கட்சியினருக்கும் நலத்திட்ட உதவிகளை செய்ய வலியுறுத்தியிருந்தார். இன்றைக்கும் தொடர்ந்து அனைத்துக் கட்சியினருடன் இணைந்து பணிபுரிய வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய ஈரோடு மாவட்டத்தின் கரோனா குறித்த ஆய்வுக் கூட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள், இடர்ப்பாடுகள் குறித்து ஆலோசித்தோம். சிக்கல்களையும், பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அனைத்துத் துறைகள் சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து அரசு மூலமாக நடவடிக்கை எடுப்போம்.
ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கரோனா நோய்ப் பாதிக்கப்பட்டோரின் சந்தேகங்களுக்கும் உரிய வழிமுறைகள் வழங்கப்படும். அதற்கு ஒரு 'வார் ரூம்' அமைக்கப்படும். அதில் 10 பேர் 8 மணி நேர பணியில் ஈடுபடுத்தப்படுவர். பொதுமக்களுக்கு 30 தொடர்பு எண்கள் விளம்பரப்படுத்தப்படும். இதனைப் பயன்படுத்தி கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளான மக்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து அதில் சிகிச்சைப் பெற அனுமதிக்கப்படுவர்.
மேலும் கரோனா தொற்று பரிசோதனை செய்யாமல் மருத்துவமனையில் அனுமதிக்க வற்புறுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே மருத்துவமனைக்கு வருகை புரிய வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 60 பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாதிப்புக்குள்ளானவர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெறுவதற்கு ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பாதிப்புக்குள்ளானவர்களே தேர்ந்தெடுத்து சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம்.