ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடுகின்றன.
காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கரும்பு லாரிகளை வழிமறித்து கரும்புத் துண்டுகளை பறித்து தின்பது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் ஆசனூர் அடுத்த தமிழ்நாடு- கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் வன சோதனை சாவடியில் குட்டியுடன் முகாமிட்ட ஒரு காட்டு யானை, சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்தது.
அப்போது சோதனை சாவடியில் சாலையில் சிதறி கிடந்த கரும்புத் துண்டுகளை காட்டு யானை தும்பிக்கையால் எடுத்த தின்றபடி தனது குட்டியுடன் நீண்ட நேரம் நின்றது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டு யானை சோதனை சாவடியில் வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் வனத்துறையினர் அச்சமடைந்தனர். அரை மணி நேரம் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் தனது குட்டியை அழைத்து சென்றதை தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.
இதையும் படிங்க:'பாசத்துக்கு முன்னாடி தான் நான் பனி' - காட்டுயானைக்கு உணவுகொடுத்து குழந்தையாக மாற்றிய இளைஞர்