ஈரோடு: தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் இரு மாநில எல்லையான கர்நாடகத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு தமிழ்நாடு இளைஞர்கள் படையெடுத்துள்ளனர்.
ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் கர்நாடகத்தில் இருந்து வாகனங்களில் மது கடத்துவது அதிகரித்துவருகிறது.
இதையடுத்து இரு மாநிலஎல்லையான காராப்பள்ளம், பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவையடுத்து காவல் துறையினர் காய்கறி லாரி, கார், சரக்கு வாகனங்களை தணிக்கைசெய்தனர்.
தமிழ்நாட்டில் தொற்று குறைந்துவருவதால் கர்நாடகத்தில் இருந்து இ பாஸூடன் வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடகத்தில் இருந்து கார், காய்கறி லாரி, வேன், தேங்காய் மட்டை லாரி என 49 வாகனங்களில் மது, 1,050 லிட்டர் சாராய ஊறல்கள், கள்ளச்சாராயம் 13 லிட்டர் ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
இது தொடர்பாக 148 பேர் கைதுசெய்யப்பட்டதாக சத்தியமங்கலம் காவல் கோட்ட துணை கண்காணிப்பாளர் சுப்பையா தெரிவித்தார்.