சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். சீனா - இந்தியா இடையே நல்லுறவு வளர்க்க மாமல்லபுரத்தில், இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர். சீன அதிபருக்கு திபெத் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், கர்நாடகத்திலிருந்து வரும் திபெத்தியர்கள் குறித்து, காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பு: பண்ணாரி சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கை
ஈரோடு: இருநாட்டுத் தலைவர்கள் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ள நிலையில், பண்ணாரி சோதனைச்சாவடியில் காவல் ஆய்வாளர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இரு மாநில எல்லையில் உள்ள உடையார்பாளையத்தில் திபெத்தியர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக வந்து, சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக வந்த தகவலையடுத்து காவல் துறையினர் பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
வாகனங்களில் அனைத்து பகுதியில் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், ஓட்டுநர்களிடம் ஆதார், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சரிபார்த்து அனுமதித்தனர். மேலும், தலைக்கவசம் அணிந்துவரும், இருசக்கர வாகன ஓட்டிகளின் முகம் ஆதாருடன் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிட்டும் தணிக்கையில் ஈடுபட்டனர்.