கோயம்புத்தூர்:சரவணம்பட்டி துடியலூர் சாலையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியின் 25ஆவது ஆண்டை முன்னிட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜவின் இசை நிகழ்ச்சி மற்றும் பிரபல யூட்யூப் சேனல் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக பல்வேறு கல்லூரிகளில் இருந்து 10,000 மேற்பட்ட மாணவர்கள் அங்கு குவிந்ததால் கல்லூரியின் மெயின் வாசல் மூடப்பட்டது. ஆனால், மாணவர்கள் உள்ளே செல்ல முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது 3 மாணவிகள் கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மேல் சக மாணவர்கள் ஏறி சென்றனர். இதனால் 3 மாணவிகளுக்கும் படுகாயம் ஏற்பட்டது.
அதன்பின் அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து மாலையில் மீண்டும் கல்லூரிக்குள் நுழைய முயன்ற மாணவர்களால், மிகப்பெரும் நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்த சரவணம்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிலோமினா உள்பட 10 மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உதவி ஆய்வாளர் பிலோமினாவுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கோவையில் யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சி இதுகுறித்து போலீசார் தரப்பில், இந்த நிகழ்ச்சி நடத்துவதற்காக காவல்துறையில் அனுமதி வாங்கவில்லை. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரியில் ஒன்று கூடுவார்கள் என்று தெரிந்தும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஏதுமின்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:‘1 மணி நேர மழைக்கே நிலைகுலைந்த சென்னை, நடவடிக்கை தேவை’ - கமல்ஹாசன்