கோவை: கோவை மாவட்டம், சூலூர் அடுத்த தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கே.பி.ஆர் மில்லில் பணியாற்றியபடி, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த 600-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அதில் மலேசிய மனித வளத்துறை அமைச்சர் சரவணன் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். பின்னர் மேடையில் பேசிய அவர், "நல்ல மனிதவளத்தை உருவாக்குவது என்பது அவர்களுடைய திறன்களை தொடர்ந்து மேம்படுத்துவதிலும், வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் கொடுப்பதிலும்தான் இருக்கிறது. உலகம் முழுவதும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பது திறன்சார்ந்த பயிற்சிகளால்தான் முடியும்.
வருங்காலத்தில் விவசாயம் சார்ந்த நிலங்கள் குறைந்து மக்களுடைய உறைவிடமாக மாறும்பொழுது, உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் வரலாம். இனி வரக்கூடிய 30 முதல் 50 ஆண்டுகளில் அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும். மலேசியா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலம் தொழிலாளர்கள் பயிற்சிகள், திறன் மேம்படுத்தல் போன்றவற்றைத் திட்டமிடலாம்" என்று கூறினார்.