தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரடங்கு காலத்திலும் தாய்ப்பால் தானம்: வியக்க வைக்கும் அமிர்தம் அமைப்பினர்! - ஊரடங்கில் தாய்ப்பால் தானம்

"ரத்த தானம், உறுப்பு தானம் என்பதில் பாலின பேதமில்லை. அதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தாய்ப்பால் தானம் என்பது பெண்களால் மட்டுமே கொடுக்க முடியும்"

அமிர்தம் அமைப்பினர்
அமிர்தம் அமைப்பினர்

By

Published : Jul 20, 2020, 6:13 PM IST

பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது, தாய்ப்பால். இந்த அருமருந்து கிடைக்காத குழந்தைகளும் பயனடையும் விதமாக, தமிழ்நாடு அரசு 2014ஆம் ஆண்டில் தாய்ப்பால் வங்கித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலமாகக் குறை பிரசவத்தில் பிறந்த பிஞ்சு குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். பால் சுரக்காத தாய்மார்களுக்கு இந்தத் தாய்ப்பால் வங்கி வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

தாய்ப்பால் வங்கி

இதன் மூலம் தாய்மார்கள் தங்களின் குழந்தைக்குக் கொடுத்தது போக, மீதமுள்ள பாலைத் தானமாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் உள்ள மில்க் பேங்கில் செலுத்தலாம். இப்படி சேகரமாகும் தாய்ப்பால், மருத்துவமனையில் முறையான தட்பவெட்ப நிலையில் பாதுகாக்கப்படுகிறது. இதனை 6 மாதம் வரைகூட பதப்படுத்தப்படுத்தி பயன்படுத்தமுடியும்.

இதன் ஒருபகுதியாக கோவையில் அமிர்தம் தாய்ப்பால் வங்கியைத் தொடங்கினார், ரூபா செல்வநாயகி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்து கோவை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் தானம் கொடுத்துவருகிறார். இதனால் அங்கிருக்கும் பச்சிளம் குழந்தைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் குழந்தைகள் பயன்பெற்றுவருகின்றனர்.

தாய்ப்பாலின் முக்கியத்துவம்

சமீப காலமாக ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அதிகரித்துவருகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே, அதனைக் கொடுக்கும் பெண்ணிற்கும் அதனால் உடலியல் செயல்பாடு மாற்றம் அடையும். தாய்ப்பால் புகட்டாத தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது ஒருபுறமிருக்க ஆதரவற்ற குழந்தைகள், குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். இந்தக் கவலைகளைப் போக்குவதுதான் அமிர்தம் தாய்ப்பால் வங்கியின் பிரதான நோக்கம்.

இதுகுறித்து அமைப்பின் நிறுவனர் ரூபா பேசுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு குழந்தைக்கு நேரடியாகத் தாய்ப்பால் வழங்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ‘நம்ம மற்ற குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுத்தா என்ன’ என்று இந்த எண்ணம் தோன்றியது. இந்த எண்ணத்தால் உருவானதுதான் அமிர்தம் அமைப்பு. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலூட்டும் பெண்களை ஒருங்கிணைத்து மாதந்தோறும் கோவை அரசு மருத்துவமனைக்கு தாய்ப்பால் தானமாக வழங்கிவருகிறோம்” என்றார்.

நான்கு மாதங்களில் 200 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த அமிர்தம் அமைப்பினர்!

கடந்த மார்ச் மாதம் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதே, அப்போது எப்படி தாய்ப்பால் தானம் செய்தீர்கள் என்ற கேள்விக்கு, ”முதலில் கொஞ்சம் தயங்கினோம். பின்னர் உலக சுகாதார அமைப்பு தாய்ப்பாலில் கரோனா பரவாது என அறிவித்தது, அப்போதுதான் எங்களிடையே ஒரு தெளிவும் புத்துணர்வும் பிறந்தது. இதையடுத்து எங்கள் நண்பர்களை ஒருங்கிணைத்தோம். கடந்த நான்கு மாதங்களில் 200 லிட்டர் தாய்ப்பால் வழங்கியுள்ளோம்.

இதன்மூலம் 700 முதல் 800 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 50 மில்லி முதல் 60 மில்லி வரை தாய்ப்பால் தேவைப்படுகிறது. அவர்களுக்காக இந்தத் தாய்ப்பால் தானத்தைத் தொடர்ந்து வழங்கிவருகிறோம். இ-பாஸ் பயன்படுத்தி செல்பவர்களிடம் தாய்ப்பாலை மருத்துவமனையில் சேர்க்க கொடுத்து அனுப்புகிறோம்” என்றார்.

ரத்த தானம், உறுப்பு தானம் என்பதில் பாலின பேதமில்லை. அதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், தாய்ப்பால் தானம் என்பது பெண்களால் மட்டுமே கொடுக்க முடியும். அதற்கு நல்ல உடல் ஆரோக்கியம் போன்ற சில காரணிகள் தேவைப்படுகின்றன.

தாய்ப்பால் தானம் குறித்து தானம் அளித்த ஆனந்தி கூறுகையில், ”எனக்கு குழந்தை பிறந்து நான்கு மாதங்களாகிவிட்டன. தற்போது கோவை அரசு மருத்துவமனைக்கு தாய்ப்பால் தானம் கொடுத்துவருகிறேன். இதன் மூலம் முகம் தெரியாத குழந்தைக்கு உதவிய ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. தாய்ப்பால் தானம் வழங்குவதால், தானம் செய்பவரின் குழந்தைகளுக்கு பால் பற்றாக்குறை ஏற்படாது. எனவே குழந்தை பெற்ற தாய்மார்கள் அனைவரும் தாய்ப்பால் தானம் வழங்க முன்வர வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: தாய்ப்பால் மூலம் கரோனா பரவுமா?

ABOUT THE AUTHOR

...view details