கோயம்புத்தூர்: சூலூர் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் குடியிருந்து வந்தவர், சௌமியா (35). இவர், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியில் இருந்த சுரேஷ் என்பவரைத் திருமணம் செய்தார்.
அவரை விவாகரத்து செய்துவிட்டு கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் லேப்டெக்னீசியனாகப் பணியில் இருந்த சீனிவாசன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
பின்னர், அவருடன் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் வாடகை வீடு எடுத்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது உறவினர் எனக்கூறியும், அவர் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தைக் கூறி அருகிலிருந்தவர்களிடம் பணம், நகைகளை வாங்கிக் கொண்டு திடீரென தலைமறைவாயினர்.
காவல் துறை விசாரணை
இது தொடர்பாக அப்பநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த அம்சா என்பவர், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தலைமறைவான சௌமியா சூலூரில் உள்ள லாண்டரி கடைக்குத் துணி வாங்க நேற்று மாலை வருவது குறித்து, தகவலறிந்த பாதிக்கப்பட்டவர்கள் லாண்டரி அருகில் காத்திருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த சௌமியாவை பாதித்தவர்கள் சுற்றிவளைக்க முயன்றபோது, காரில் ஏறி தப்பினார். அவரைத் துரத்திச் சென்ற பாதிக்கப்பட்டவர்கள், கோவை பாப்பநாயக்கன் பாளையம் பாலுந்தரம் ரோட்டில் மடக்கிப் பிடித்தனர்.
அப்போது அங்கு வந்த ரோந்து காவல் துறையினர் சாலையில் தகராறு நடப்பதைப் பார்த்து அங்கிருந்த அனைவரையும் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.