தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கைது! - காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

கோவை: நான்கு உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் உள்ள கிராமத்தை ஒரே உள்ளாட்சி அமைப்பின்கீழ் கொண்டுவர வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட கிராம மக்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

போராட்டம்
போராட்டம்

By

Published : Jan 6, 2021, 4:27 PM IST

Updated : Jan 6, 2021, 5:00 PM IST

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள பொன்னன்டம்பாளையம் கிராமத்தை ஒரு உள்ளாட்சி அமைப்பின்கீழ் கொண்டுவரக் கோரி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த ஒன்றாம் தேதி வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் மேற்கொண்டனர்.

இதனை அடுத்து நேற்று (ஜன. 05) சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்களுடன் வட்டாட்சியர் மீனாகுமாரி, கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் அறிவித்தபடி இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி உண்ணாவிரதம் நடைபெறும் என பொதுமக்கள் நேற்று இரவு அறிவித்தனர்.

அதன்படி இன்று காலை கிராமத்தில் உள்ள கோயிலில் ஒன்றுகூடிய கிராம மக்கள் அங்கிருந்து ஊர்வலமாக உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தனர். அப்போது பொன்னன்டம்பாளையம் கிராமத்தை ஒரு உள்ளாட்சி அமைப்பின்கீழ் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், “நீண்ட வருடங்களாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டுவந்த நிலையில் அரசு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

தற்போது போராட்டங்கள் அறிவித்த நிலையிலும் தங்களுடைய கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து இன்று தடையை மீறி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டோம்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கைது

காவல் துறை எங்களை கைதுசெய்தாலும் தொடர்ச்சியாக எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்” எனக் கிராம மக்கள் தெரிவித்தனர்.

Last Updated : Jan 6, 2021, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details