கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் பொதுமக்களிடம் அரசாங்க சேவைகளுக்கு லஞ்சமாக பணம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் திடீரென ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது உள்ளே இருந்த அலுவலர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், வெளியிலிருந்து யாரையும் உள்ளே அனுமதிக்காத வகையில் கதவை அடைத்து வைத்திருந்தனர். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முழுவதுமாக சோதனையிட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்து ஐந்தரை லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.