வால்பாறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை தோட்டத்துக்கு வேலைக்காக வரும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வேளையில் வால்பாறை பகுதியில் வாரச்சந்தை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று, கத்தியால் தன்னைத்தானே வயிற்றில் குத்திக்கொண்டு காயத்துடன் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வடமாநில இளைஞர் ஒருவர் சென்றுள்ளார்.
அவரைக் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர் முகம் தெரியாத ஒருவர் தன்னை கத்தியால் வயிற்றில் குத்தியதாகத் தெரிவித்தார். காவல் விசாரணையில் காயமடைந்தவர் பெயர் கோபால் பங்கட் என்றும், அவர் வால்பாறை அருகியுள்ள சோலையர் எஸ்டேட் பகுதியில் தோட்ட வேலை செய்வதாகத் தெரிந்தது. வால்பாறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து வால்பாறை காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, மூன்றாவது கண்ணாக செயல்படும் கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளைக் கண்காணித்தனர். அதில் ஏற்பட்ட காட்சியைப் பார்த்து அதிர்ந்துபோயினர் காவல் துறையினர். அதில் சாலையோர கடையில் ஒன்றிலிருந்து அந்த இளைஞர் கத்தியை வாங்குவது போல் கத்தியை எடுத்துப் பார்த்துள்ளார். பின்னர் மூன்று முறை வயிற்றில் குத்துவதற்கு முயற்சிசெய்து பின் அவரே தனது வயிற்றில் குத்தி காயம் ஏற்படுத்திக்கொண்ட காட்சியைக் கண்டனர்.
குடிபோதையில் தன்னைத்தானே குத்திக்கொண்ட இளைஞர் குடிபோதையில் இளைஞர் தன்னைத்தானே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வால்பாறை பகுதியில் சாலையோரக் கடைகளில் கத்தி போன்ற ஆயுதங்கள் விற்கத் தடைசெய்யப்பட்டுள்ளதாக வால்பாறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.