மழையில் ஒழுகும் ஓலைக் குடிசைகள், பாதியில் நிற்கும் பசுமை வீடுகள், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை, படிப்பைப் பாதியில் நிறுத்தும் மாணவர்கள். இது, ஏதோ அடர் வனத்திற்குள்ளோ, மலைகளில் வாழும் பழங்குடிகளின் நிலையில்லை. இது கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் உள்ள ரொட்டி கவுண்டன்புதூர் பகுதியில் சமவெளிப் பகுதியில் வாழும் மலசர் பழங்குடி நிலை.
காடு, மலைகளில் வாழும் பழங்குடிகளுக்குக் கிடைக்கும் அடிப்படை வசதிகள்கூட சமவெளியில் வசிக்கும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. இங்கு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இப்பழங்குடிகளுக்கு, சுற்றுவட்டார விவசாயத் தோட்டங்களில் உள்ள கூலி வேலையை நம்பித்தான் வாழ்வாதாரத்தைக் கடத்திவருகின்றனர்.
குறுகிய ஓலைக்குடிசையில் பொருள்களை அடைத்துவைத்து, குடும்பம் நடத்துவதே பெரும்பாடாக உள்ளது. மழைக்காலத்தில் இவர்களின் சிரமங்களைச் சொல்லி மாளாது. சிலருக்குப் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டாலும், எல்லாம் பாதியில் நிற்கிறது.
6 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறையும் பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளும் இன்னும் வந்து சேரவில்லை. இரவு மட்டுமல்ல பகலும் தங்களுக்கு இருட்டாகவே உள்ளதாகப் பழங்குடிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இப்படி அடிப்படை வசதிகளைப் போலவே அரசின் அடையாள அட்டைகள் கிடைக்காத நிலையில், அடையாளம் அற்றவர்களாக வாழ்கின்றனர். பலருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவை இல்லாததால் அரசின் சலுகைகளைப் பெற முடியாத நிலை உள்ளது. பள்ளிச் செல்லும் இப்பகுதி மாணவர்களுக்குச் சாதிச் சான்றிதழ் கல்வியைத் தொடர தடையாக உள்ளது.