பொள்ளாச்சி அருகே வடசித்தூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையிலும் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், ”தற்போதுள்ள சூழலில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்கும் நிலை இல்லாத காரணத்தால், தகவல் தொழில்நுட்பப் பிரிவு சிறப்பாக செயல்பட்டால், வரும் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.
திமுகவில் உட்கட்சிப் பூசல், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சித்தாவல் போன்றவை அதிமுகவிற்கு சாதகமாக அமையும். எனவே, திமுக நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது. ஆகவே, கட்சித் தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார்.