தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வடிவேலு காமெடி போல அடி வாங்காமலேயே வாக்குமூலம் அளித்த மதுப்பிரியர்களுக்குச் சிறை! - போதையில் காவலர்களை தாக்கிய இருவர் கைது

கோயம்புத்தூர் அருகே விசாரணைக்குச் சென்ற காவலர்களைத் தகாத சொற்களால் திட்டி, தாக்க முயன்ற போதை ஆசாமிகள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

காவலர்களுடன் வாக்குவாதம் செய்தவர்கள்
காவலர்களுடன் வாக்குவாதம் செய்தவர்கள்

By

Published : Dec 27, 2021, 7:52 PM IST

கோயம்புத்தூர்:சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் வசித்துவருபவர் முருகன். இவர், அதே பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் சி.என்.சி. ஆப்பரேட்டராகப் பணிபுரிந்துவருகிறார். இவரது நண்பர்களான வெங்கடேசன், சக்திவேல் ஆகியோர் அதே பகுதியில் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையை நடத்திவருகின்றனர்.

இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு முருகனின் வீட்டிற்கு வந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். இருவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில் அப்பகுதியில் வசித்துவரும் வடமாநிலத் தொழிலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ரகளையில் ஈடுபட்ட சக்திவேல், வெங்கடேசன் ஆகியோரை எச்சரித்துவிட்டுச் சென்றனர். காவல் துறையினர் சென்றவுடன் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்தவர்களிடம் மீண்டும் ரகளையில் ஈடுபட்டனர்.

தம்பதியைத் தாக்கிய போதை ஆசாமிகள்

அப்போது, காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்ததாகக் கூறி பத்மநாபன் என்பவரைச் சரமாரியாகத் தாக்கியதுடன், தடுக்கவந்த பத்மநாபனின் மனைவி ஜெயந்தியையும் கொலைவெறியுடன் தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் தலையில் காயமடைந்த பத்மநாபனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து போதை ஆசாமிகள் மீண்டும் தகராறு செய்வதாக ஜெயந்தி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

புகாரை விசாரிக்க மீண்டும் சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்களை போதை ஆசாமிகள் இருவரும் தன்னிலை மறந்து தகாத சொற்களால் திட்டினர். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய போதை ஆசாமிகள் காவல் துறையினரைத் தாக்க முயற்சித்தனர். அப்போது, தாங்கள் இருவரும் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை நடத்திவருவதாகவும், தங்களுக்கு நிறைய திருட்டு வண்டிகள் வருவதாகவும் அடிக்காமலேயே வாக்குமூலம் (வடிவேலு பட காமெடி போன்று) அளித்தனர்.

காவலர்களுடன் வாக்குவாதம் செய்தவர்கள்

மதுப்பிரியர்களுக்கு சிறை

மேலும், எங்களது முகவரியைத் தருகிறோம் முடிந்தால் பிடித்துப் பாருங்கள் எனக் காவல் துறையினருக்குச் சவால் விடுத்தனர். இதையடுத்து சக்திவேல், வெங்கடேசன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போதையில் இருவரும் காவல் துறையினரை வசைபாடி தாக்குவதை அங்கிருந்த சிலர் செல்போனில் காணொலி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தக் காட்சிள் தற்போது வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க:Fight In front of Police: காவலர்கள் கண்ணெதிரே நடந்த அநியாயம் - விளக்கமளித்த போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details