கோயம்புத்தூர்: வடகோவையிலுள்ள தமிழ்நாடு வனஉயிர் பயிற்சியகத்தில் வனத்துறை சார்பில் வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வனத்துறை உயரலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “அதிமுக ஆட்சியில் வன விலங்குகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்கவில்லை. 6 கோடி ரூபாய் வரையிலான தொகையை மக்களுக்குக் கொடுக்காத அரசாக அதிமுக அரசு இருந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கக்கோரி முதலமைச்சர் அரசாணை வெளியிட்டுள்ளார். வன விலங்குகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படமால் இருக்க வனத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்” என்றார்.
புலியை தேடும் பணி தீவிரம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மண் சார்ந்த மரங்களை மாவட்டம் தோறும் வளர்க்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. அயல்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தைலம் உள்ளிட்ட மரங்களை அகற்ற இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.
டி23 புலியை பிடிக்க கேரளாவிலிருந்து வனத்துறையினரும் வந்துள்ளனர். புலியைக் பிடிக்கும்போது மழை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் வருவதால் சற்று சிரமமாக உள்ளது. புலி ஆரம்பத்தில் சுற்றித் திரிந்த இடமான தேவன் எஸ்டேட் பகுதியிலும் 30 வனத் துறையினர் புலியைத் தேடி வருகின்றனர்.