கோயம்புத்தூர்: கோவையைச் சேர்ந்த காந்தவயல் பழங்குடியின கிராம மக்கள் யானைக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். இதனையடுத்து நாளை (ஆகஸ்ட் 31) விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விசேஷ தினங்களில் யானை சிலைக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ள உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் யானைகள் கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது வழக்கம்.
ஒரு சில நேரங்களில் இந்த யானைகளால் மனித விலங்குகள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகின்றன. யானை வழித்தடங்களில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளால் யானைகள் வழிமாறி செல்வதால் ,அதன் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை இக்கிராம மக்கள் முரசு கொட்டியும், பட்டாசு வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.
மேலும் தங்களது விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து விடுவதை தடுக்க அகழிகள் வெட்டியும், சூரிய மின்வேலியும் அமைத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் சிறுமுகை லிங்காபுரம் அருகே மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்டு பச்சை பசேல் என்று பரந்து விரிந்து காணப்படும் இயற்கை எழில் சூழலில் காந்தை ஆற்றின் அருகே உள்ள காந்தவயல் பழங்குடியின கிராம மக்கள் யானைக்கு கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.
யானைக்கு கோயில் கட்டி வழிபடும் பழங்குடியினர் - விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு மேலும் கிராம மக்கள் தங்கள் விளை நிலங்களில் அறுவடை செய்த முதல் பயிர்களை யானை சிலை முன்பு வைத்து பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனால் யானைகள் தங்களது விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தடுக்கப்படும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கையெடுத்து கும்பிட்டால் யானைகள் சென்று விடும்: இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘ யானைகள் வனப்பகுதியில் வாழ்ந்தாலும் மனிதர்கள் பேசும் மொழியை புரிந்து கொள்ளும் தன்மையை கொண்டவை. கிராமத்துக்குள் வரும் யானைகளைப் பார்த்து கணபதியே ஊருக்குள் வராதே திரும்பி போ! என்று கை கூப்பி வணங்கி வேண்டிக்கொண்டால் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன. இப்படித்தான் தங்களது முன்னோர்கள் யானைகளை கட்டுப்படுத்தினர்.
யானைக்கு கோயில் கட்டி வழிபடும் பழங்குடியினர் - விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு மேலும் தங்களுடைய மூதாதையர் பல ஆண்டுகளுக்கும் முன்பு இந்த யானை சிலையை வைத்து வழிபாடு மேற்கொண்ட நிலையில் தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக இந்த வழிபாடு தொடர்ந்து வருவதாகவும் நகரங்களில் நாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை வைத்து வழிபாடு மேற்கொள்கின்றனர். ஆனால் தங்களுடைய கிராமத்தில் யானையே விநாயகராக உள்ளதால் இங்கு யானை சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதாக தெரிவித்தனர். வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் யானைகளோடு இணைந்து எப்படி வாழ வேண்டும் என்பதை மற்றவர்களுக்கு எடுத்து கூறி வருகின்றனர் இந்த காந்தவயல் பழங்குடியின கிராம மக்கள்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வந்த வரலாறு