அரசு தொலைக்காட்சியான பொதிகை தொலைக்காட்சியில் டிசம்பர் 1ஆம் தேதிமுதல் தினமும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்தி வாசிப்பும், ஒவ்வொரு சனிக்கிழமையும் சமஸ்கிருத மொழியில் செய்தித் தொகுப்பும் வாசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் முடிவை கண்டித்து, கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள பொதிகை தொலைக்காட்சி அலுவலகத்தை தபெதிக அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தபெதிக இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் கூறுகையில், “வெறும் 15 ஆயிரம் பேர் மட்டும் பேசும் சமஸ்கிருத மொழிக்கு 1000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி இருக்கின்றது, இது தேவையற்றது. அதுமட்டுமின்றி, சமஸ்கிருத மொழியில் செய்திவாசிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க...டெல்டா, வட மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை