கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளது. அந்த ஊராட்சிக்குள்பட்ட காந்திநகர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்துவருகின்றனர்.
அப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டிற்கும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது.
22 பயனாளிகளுக்கு கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கழிப்பிட கட்டுமான பணிகளும் நடைபெற்றன. அதில் பெரும்பாலான வீடுகளுக்கு கழிப்பறை கட்டடம் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டது.
மேற்கொண்டு கழிவுநீருக்கான நிலத்தடி கழிவுநீர் தொட்டி கட்டப்படவில்லை. கழிப்பிட பணிகள் முழுமைபெறாத நிலையிலேயே அவை பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மூன்று ஆண்டுகள் கடந்தும் கழிவுநீர் தொட்டி அமைக்கப்படாததால் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
கழிப்பறை கட்டடமும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு கழிப்பறைக்கும் 12 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகப் போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் காந்திநகர் மக்கள் தெரிவித்தனர். காட்சிப் பொருளாக உள்ள கழிப்பறைகள் விறகு, பழைய இரும்புப் பொருட்கள் வைப்பு அறையாக மக்கள் பயன்படுத்திவருகின்றனர்.