கோவை: வால்பாறை எம்எல்ஏ அலுவலகத்தை சமூக விரோதிகளிடம் இருந்து மீட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
வால்பாறையில் 2003 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அப்போதைய வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தினால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து, 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை எட்டிப் பார்க்காத சட்டமன்ற உறுப்பினர்களால் தற்பொழுது அந்த அலுவலகம் முழுவதும் கஞ்சா, மது உள்ளிட்ட போதை வஸ்துகள் பயன்படுத்தும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
மேலும் அரசு கல்லூரி, அரசு பள்ளி அருகில் உள்ளதால் பள்ளி நேரம் முடிந்தவுடன் மாணவர்கள் கேட்பாரற்று கிடக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமர்ந்து கஞ்சா புகைப்பது மற்றும் போதை வஸ்துக்களை பயன்படுத்துவது தொடர்கின்றது.
இவை தவிர அலுவலகத்தில் உள்ள மேசை, நாற்காலி, ஜன்னல், கண்ணாடிகளையும் உடைத்து சேதபடுத்தியும் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்தும் உள்ளனர். இதனால், இக்கட்டடம் குற்றவாளிகளின் கூடாராமாக மாறி அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.