தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கரோனாவை விட கொடுமையானது மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை' - Worse than Corona is the Department of Public Welfare

சென்னை: கரோனா பெருந்தொற்று பரவிவரும் நிலையில் அதைவிட கொடுமையாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயல்படுகிறது என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கரோனாவை விட கொடுமையானது மக்கள்  நல்வாழ்வுத்துறை ஜாக்டோ ஜியோ குற்றசாட்டு
கரோனாவை விட கொடுமையானது மக்கள் நல்வாழ்வுத்துறை ஜாக்டோ ஜியோ குற்றசாட்டு

By

Published : Apr 23, 2020, 10:32 AM IST

Updated : Apr 23, 2020, 7:54 PM IST

இது குறித்து ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

"தமிழ்நாடு அரசுப் பணியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 22-1-2019 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டோம்.

இந்நிலையில், 29-1-2019 அன்று முதலமைச்சர் வெளியிட்ட அன்பான வேண்டுகோளை ஏற்றும் பொதுமக்கள், மாணவர் நலன் கருதியும் அரசுப் பணிகள் முடங்குவதால், அரசுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும் வேலைநிறுத்தத்தை கடந்த 30-1-2019 அன்றே கைவிட்டு பணிக்கு வந்தோம். பணிக்கு திரும்பி ஓராண்டுகள் கடந்த நிலையிலும், 5068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களின் மீது போராட்ட காலத்தில் தொடுக்கப்பட்ட குற்றக் குறிப்பாணைகள் 17(பி), 1500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் இன்று வரை நிலுவையில் உள்ளன.

மேலும், குற்றக் குறிப்பாணைகள் 17(பி) நிலுவையில் உள்ளதால், பதவி உயர்வும் பணி ஓய்வும், ஓய்வுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களும் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதோடு மட்டுமல்லாமல், போராட்டத்தின்போது காவல் துறையால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னணியில் எப்ஐஆர் பதியப்பட்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து நடக்கிறது.

தற்போது, உலகையே கரோனா நோய் தொற்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவே முழுவதுமாக ஊரடங்கில் முடங்கிக் கிடக்கிறது. இத்தகைய அசாதாரண சூழ்நிலையிலும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 17(பி) குற்றக் குறிப்பாணை பெற்று, அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையில் மருத்துவம் அல்லாத மேற்பார்வையாளராக பணியாற்றி 31-3-2020 அன்று அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற இருந்த என். நமச்சிவாயத்தை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் 30-3-2020 அன்று தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

கரோனா நோய் தொற்று மிகக் கடுமையாக உள்ள இந்த நேரத்திலும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு 17(பி) குற்றக் குறிப்பாணை பெற்ற ஒரே காரணத்திற்காக, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்காமல் இருப்பது என்பது கரோனா பாதிப்பை விட மிகக் கொடியதாகும். அவரின் தற்காலிகப் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, முறையாக பணி ஓய்வு பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் கரோனா பெருந்தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு, செயல்பட்டுக் கொண்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், இதுபோன்ற ஒரு நிகழ்வு இனிவரும் காலத்தில் ஏற்படாத வகையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு 17(பி) குற்றக் குறிப்பாணை பெற்ற ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறும்போது, அவர்களுக்கு முறையாக உரிய நேரத்தில் பணியிலிருந்து ஓய்வு பெறவும் 17(பி) குற்றக் குறிப்பாணைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்". இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனாவை கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கிய கல்விக் குழுமம்

Last Updated : Apr 23, 2020, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details