தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காட்டுயானையாக இருந்து, கும்கியாக மாறிய முத்து யானையின் முதல் டாஸ்க்! - கும்கி யானை

பொள்ளாச்சிப் பகுதியில் 7 பேரை தாக்கி கொன்ற 20 வயதான அரிசி ராஜா காட்டு யானை, கும்கி யானையாக மாறி, கலீம் யானையுடன் இணைந்து முதல் முறையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பைக் காணலாம்.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி

By

Published : Aug 19, 2022, 11:14 PM IST

கோவை : கோவை, வெள்ளலூர் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு அடுத்தடுத்து 4 பேரை தாக்கி கொன்றது ஒரு ஆண் காட்டு யானை. இதனையடுத்து அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர். டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். இதனையடுத்து அங்கிருந்து கீழே சென்ற அந்த யானை 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சி அடுத்த நவமலைப் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கிய குழந்தை மற்றும் ஒருவரை தாக்கிக் கொன்றது.

பின்னர் அந்தப் பகுதியில் தனியாக இருந்த வீடுகளில் புகுந்து அரிசியை மட்டும் சாப்பிட்டதால் அதற்கு 'அரிசி ராஜா' எனப் பெயர் வைத்தனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த விவசாயி ஒருவரை அந்த யானை தாக்கி கொன்றதால், அரிசி ராஜா யானையைப்பிடிக்க அரசாங்கம் உத்தரவிட்டது.

இதனையடுத்து 'அரிசி ராஜா' யானையைத் தொடர்ந்து கண்காணித்து 5 நாட்கள் போராட்டத்திற்குப் பின்பு ஆனைமலை அடுத்த அர்த்தநாரிபாளையத்தில் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் கலீம், பாரி உதவியுடன் வனத்துறையினர் பிடித்து டாப்சிலிப் வரகளியாறு யானைகள் முகாமில் உள்ள கிரால் எனப்படும் மரக்கூண்டில் அடைத்தனர்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிடிக்கப்பட்ட அரிசி ராஜா யானையை 9 மாதம் கிராலில் அடைத்து பயிற்சி அளித்தனர். பின்னர் அரிசி ராஜா என்ற பெயரை ’முத்து’ என மாற்றிய வனத்துறையினர், கும்கி யானைக்குரிய பயிற்சிகளை அளித்துள்ளனர்.

இந்நிலையில் கோவை ஆனைகட்டிப் பகுதியில் வாயில் காயத்துடன் இருக்கும் காட்டு யானையை பிடிக்கும் பணிக்கு, கும்கி யானை கலீமுடன் முதல்முறையாக ’அரிசி ராஜா’ என்கிற ’முத்து’ யானையும் களமிறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரிசி ராஜாவின் பாகன் ராஜ்குமார் கூறுகையில், 'அரிசி ராஜாவை கலீம் யானையை வைத்துப்பிடித்த நிலையில், தற்போது கலீம் யானையுடன் சேர்ந்து முதல் ஆப்ரேசனுக்காக களமிறக்கப்பட்டுள்ளது.

மிகுந்த நம்பிக்கையுடன் அரிசி ராஜாவை அழைத்து வந்திருக்கிறோம். மிகவும் தைரியமான யானை, இதைப் பிடித்த போது கலீம் யானையையே தாக்கியது. 18 வயதில் பிடிக்கப்பட்ட இந்த அரிசி ராஜா யானைக்கு, இப்போது 20 வயது ஆகின்றது.

ஆரம்பத்தில் மரக்கூண்டில் வைத்துப் பயிற்சி அளிப்பது என்பது மிகவும் சிரமமாக இருந்தது. இரண்டு முறை ஜோதி ராஜைத் தாக்க முயன்ற நிலையில், ஜோதி ராஜ் நொடியில் உயிர் தப்பினார். பின்னர் அதன் கோபத்தைத் தணிக்க தாங்கள் மேற்கொண்ட முயற்சி அனைத்தும் பலன் அளித்ததால், விரைவில் அதன் அருகில் நெருங்க முடிந்தது.

இதனை அடுத்து தங்களுடைய பாசத்தை யானையிடம் காண்பித்த நிலையில் அதுவும் கோபத்தை மறந்து தங்களிடம் பாசமாக பழகத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அதன் கோபத்தை சரி செய்து, தங்களுடைய கட்டளைகளுக்கு அடி பணியும் அளவிற்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் திறமையான இந்த யானை, வரும் காலங்களில் கலீம் யானைக்கு ஈடாக வரக்கூடிய நிலை உள்ளது. இந்த யானை எங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக தற்போது மாறி உள்ளது. மேலும் இந்த யானைக்குப் பிடித்த உணவு என்பது அரிசி சாப்பாடு தான். ராகி களி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டாலும், அரிசி உணவையே விரும்பி உண்ணும்” எனத் தெரிவித்தார்.

காட்டுயானையாக இருந்து, கும்கியாக மாறிய முத்து யானையின் முதல் டாஸ்க்!

’7 பேரைக் கொன்ற அரிசி ராஜாவை கலீம் யானையை வைத்துதான் பிடித்ததாகவும், இப்போது கும்கியாக பயிற்சி எடுத்துள்ள நிலையில் முதல்முறையாக காட்டு யானையை பிடிக்க கலீமுடன் களமிறக்கப்பட்டுள்ளது. இதுவரை எத்தனையோ ஆபரேஷன்களை கலீம் செய்து இருந்தாலும், அரிசி ராஜா யானையைப்பிடிக்கும் போது கலீம் யானையையே அரிசி ராஜா தாக்கியதில், கலீமுக்கு நெற்றியில் இரண்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு பெரிய கும்கி யானையை தாக்கிய அரிசி ராஜா நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர், சிறந்த கும்கியாக வரும் எனத்தெரியும். அதனைக்கொண்டு அடுத்த கட்ட ஆபரேஷன்களை செய்ய முடியும். கலீம் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், கலீம் இடத்திற்கு மாற்றாக அரிசி ராஜா என்னும் முத்துவைக் கொண்டு வரலாம்’ என கலீம் யானையின் பாகன் மணி தெரிவித்தார்.

இதையும் படிங்க:நான்காவது நாளாக யானையை தேடும் பணியில் வனத்துறை

ABOUT THE AUTHOR

...view details