கோவைமாவட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மோதூர் வனப்பகுதி இரட்டைக்கண் பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் யானை ஒன்று குட்டியுடன் உயிரிழந்திருப்பதை கண்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வனத்துறை உயர் அலுவலர்களுக்குத் தகவல் அளித்தனர்.
அதில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க யானை குட்டியை ஈன்றெடுக்கும்போது, ஏற்பட்ட பிரசவ வலியின் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும்; இறந்து இரு நாட்கள் இருக்கலாம் என்றும் வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 16 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.