கரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுப நிகழ்ச்சிகளுக்கும், மக்கள் கூடுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், நாதஸ்வரம், தவில் இசைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இதில் குறிப்பாக நாகப்பட்டினம், கோவை, திருவண்ணாமலை போன்ற ஊர்களில் வசிக்கும் நாதஸ்வரக் கலைஞர்கள் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 'ஊரடங்குக்கு முன்பாக நிச்சயம் செய்யப்பட்டு, சித்திரை, வைகாசி மாதங்களில் நடைபெறவிருந்த திருமணங்களுக்காக முன்பணம் கொடுத்து பதிவு செய்துகொண்டவர்கள், தற்போது பணத்தை திரும்பக் கேட்கின்றனர். கோயில்களில், பங்குனி உத்திரம், சித்திரை மாதத் திருவிழாக்களை ரத்துசெய்து, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளதால், இசை வாத்தியங்களை மட்டுமே நம்பியிருக்கும் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்றனர்.