தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. இதில் அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய நல்லசாமி, மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல திருத்தங்களை செய்யாமலேயே தேர்தல் நடைபெறுவதாகவும் அதை திருத்திய பிறகே தேர்தல் நடத்த வேண்டுமென கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "உள்ளாட்சி தேர்தலில் கொள்கை முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் சிற்றூராட்சி உறுப்பினர் முதல் மாநகர மேயர் பதவி வரை சுயேட்சை சின்னங்களை கொண்டே தேர்தல் நடைபெற வேண்டும். 1967க்கு பின் உள்ளாட்சிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், கால்நடை மேம்பாடு, வேளாண்மை துறைகள் போன்றவற்றை மீண்டும் உள்ளாட்சிக்கே தர வேண்டும்" என்று தெரிவித்தார்.