கோயம்புத்தூர்:தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் பொதுமக்களிடையே கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழக நிறுவனம், மாநில மின்சுமை பகுப்பு மையம் ஆகியவற்றின் மின்கட்டணம் விகிதத் திட்டங்கள் கலந்தாலோசிக்கப்படுகிறது. இதன் படி 2022-23 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான மின் கட்டணத்தையும் மற்றும் இதர கட்டணத்தையும் நிர்ணயித்தல் ஆகிய மனுக்களின் மீது கருத்து கேட்கப்படுகிறது.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில்துறையினர், சிறு குறு தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், பல்வேறு மனுக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.