‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்டமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று (ஜன.24) காலை புளியகுளத்தில் தொடங்கி ராமநாதபுரம், சிங்காநல்லூர், காளப்பட்டி, குரும்ப பாளையம், கோவில் பாளையம் ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்னூரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவினாசி - அத்திக்கடவு, திட்டம் நடைமுறைக்கு வரும்போது, அன்னூர் பகுதியில் வறட்சி நீங்கும். இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய அரசு அதிமுக. மனிதருக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் விவசாயிக்கு உயிரான நீரை வழங்கியது அதிமுகதான்.
மேலும் நீரை வீணாக்காமல் தேங்கி வைக்க அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டது. ரூ.247 கோடி திட்டத்தில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருந்ததியர் சமுதாய மக்கள் வாழும் வீட்டிற்கு சென்று டீ குடித்து வந்துள்ளேன். ஏழை வீட்டிற்கு வந்துள்ளீர்களா? என அவர்கள் கேட்டார்கள் தமிழ்நாட்டில் ஏழை என்ற பெயருக்கு இடமில்லை, கிராமத்தில் அனைவருக்கும் வீடு, நகரத்தில் அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படுகிறது.
தாய் பெற்றெடுத்த குழந்தையை வளர்ப்பதுபோல அதிமுக மாணவர்களை வளர்க்கிறது. வல்லரசு அமெரிக்கா நாடு கூட இலவச மடிக்கணினி வழங்கவில்லை, ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக அரசு வழங்கியது. மு.க ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து பொய் சொல்லி வருகிறார். 2010ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அங்கம் வகித்த திமுக இருக்கும்போதுதான் நீட் வந்தது. அதை தடுக்க அதிமுக முயன்றது.
13 ஆண்டுகாலம் மத்தியில் கூட்டணியில் இருந்தும் கூட, நீலகிரி திமுக எம்பி ஆ. ராசா, உட்பட அனைவரும் வாய்ப்பொத்தி பதவி, அதிகாரம் முக்கியம் என மௌனம் சாதித்துவிட்டு, தற்போது பொய் சொல்லி வருகின்றனர். அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 2,87,000 மகளிருக்கு மானியம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் சிறப்பு குறைதீர் கூட்டம் மூலம் அரசாங்கமே உங்களை நாடி வருகிறது. 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, ஐந்து லட்சம் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.