கோவை:தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று (மார்ச் 19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், வேளாண் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேட்டியளித்துள்ளார்.
அதில், "அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி, தமிழ்நாட்டிலுள்ள படித்த வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு 200 பேருக்கு ரூ.1 லட்சம் வீதம் ஊக்கதொகையாக வழங்குவதாகவும், வேளாண்பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேளாண்சார் கடன் வழங்குவதாக எடுத்துள்ள முடிவு வரவேற்புக்குரியது. கிராமப்புற இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
தனிபட்ஜெட்
விவசாயத்துக்கு தனிபட்ஜெட் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி 33 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண் பட்ஜெட்டிற்கு ஒதுக்கி இருப்பதை வரவேற்புக்குரியது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க தனி மண்டலங்கள், தேனீ வளர்ப்பு, பனை வளர்ப்பு , பருப்பு மையம், உணவு பூங்கா போன்ற விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றி நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது, உழவர் சந்தைகள் மாலை நேரங்களில் சிறுதானியங்கள் விற்பனைக்கு அனுமதித்து இருப்பதும் வரவேற்கதக்கது.
அதே வேளையில், கோவை மாவட்டத்தை மையப்படுத்தி தென்னை, கருவேப்பிலை விவசாயிகள் இருந்து வரும் நிலையில், தென்னை சார்ந்து பல்லாயிரம் கோடி மதிப்பினால 33 மதிப்பு கூட்டு பொருள்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் இவற்றுக்கு பட்ஜெட்டில் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.