கோவையில் பள்ளிகல்வித்துறை சார்பில் பி.எஸ்.ஜி. கல்லூரி வளாகத்தில் இன்று (ஏப்.23) நடந்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டு அரசைப் பொறுத்தவரை மாநிலக் கல்விக் கொள்கை நிலைப்பாடே தான் பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை:இந்நிகழ்ச்சியில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலர்கள், கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், 'செயல் வழி கற்றல் முறை இருந்தாலும் அதை மேம்படுத்த "புதிய கல்விக்கொள்கை" உதவும். புதிய கல்விக்கொள்கையில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன எனவும் கொள்கைகள் தாண்டி அதில் இருக்கும் நல்ல விஷயங்கள் நமது மாநிலத்திற்கும் கிடைக்க வேண்டும். எனவே, புதிய கல்விக் கொள்கையினை திறந்த மனுதுடன் மாநில அரசு அணுக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கவேண்டும்: இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, 'மாணவர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்லும் பள்ளிகளுக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' கேட்டுக் கொண்டார்.
எந்த எம்.எல்.ஏ ஆக இருந்தாலும் அவர்கள் கொடுக்கும் லிஸ்ட்டை பாருங்கள், தேவையான நிதியை ஒதுக்கி பணிகளை செய்து வேண்டும் எனத் தெரிவித்தார். கொங்கு மண்டலத்தில் எதிர்க் கட்சியைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
கல்வி தரத்தை மேம்படுத்த ஆலோசனை:அவர்களிடம் சென்னையில் சட்டப்பேரவையில் இருக்கும் போது தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தேவையானதை சொல்லுங்கள் என்று கேட்டு இருக்கிறேன் எனவும் தெரிவித்தார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மண்டல அளவில் களநிலவரம் குறித்தும் கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஒவ்வொரு மண்டலத்திலும் அங்கு உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சொல்லும் கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்துகிறோம் எனவும் தெரிவித்தார். இது போன்ற ஆலோசனைகள் துறைக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்றார்.