கோயம்புத்தூர்:பெண்களால் சில விஷயங்களை மட்டுமே செய்யமுடியும், கடினமான வேலைகளை செய்யமுடியாது என்ற பொது சமூகத்தின் எண்ணத்தையும், கூற்றையும் பல பெண்கள் தங்கள் திறமைகள், சாதனைகளால் உடைத்துள்ளனர். அந்த வகையில், கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கனரக வாகனத்தை இலகுவாக ஓட்டி இரும்புப்பெண்மணியாகத் திகழ்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்காள ஈஸ்வரி என்ற பெண், ஆண்களால் மட்டுமே செய்யமுடியும் என்று கூறப்படும் பல வேலைகளை எளிதாக செய்துவருகிறார். கட்டடப் பணி, மேம்பால பணி ஆகியவற்றில் பயன்படுத்தும் பொக்லைன் வாகனத்தை அசாத்தியமாக இயக்கி வருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், கோவையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். விவசாயம் செய்ய முடியாமல் கோவைக்கு வேலை தேடி வந்த அங்காள ஈஸ்வரி, கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து கனகர வாகனங்களை இயக்க அவருக்குள் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
கனரக வாகனம் ஓட்டும் குடும்ப பெண்
இவரது ஆர்வத்தை அறிந்த அவரது கணவர், அங்காள ஈஸ்வரிக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்து வந்துள்ளார். மேலும், யூடூப் மூலம் பொக்லைன் இயந்திரத்தை இயக்க அங்காள ஈஸ்வரி பயின்றுள்ளார். இதனிடையே, சாரி இன்டிகேட்ஸ் அமைப்பு இளம் பெண்களை தொழில் முனைவராக மாற்றி வருவதை அறிந்து அந்த அமைப்பை தொடர்புகொண்டுள்ளார் அங்காள ஈஸ்வரி.
கார், லாரி இவற்றை தவிர்த்து பொக்லைன் இயந்திரத்தை கையாள வேண்டும் என்ற இவரது ஆசைக்கு கை கொடுத்தது சாரி இண்டிகேட்ஸ் நிறுவனம். ஆறுமாதமாக விடாமல் பயிற்சி செய்த அங்காள ஈஸ்வரி, தற்போது பொக்லைன் இயந்திரத்தை திறம்பட இயக்கி வருகிறார்.