கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ளது கண்டிவழி கிராமம். மலைப்பகுதிக்கு அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் குடிநீர் தொட்டி கட்டடத்தை தவிர மற்ற கட்டங்களெல்லாம் குறுகலாகவும் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 20 தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுத்தார். காலப்போக்கில் அந்த வீடுகள் குடியிருக்க முடியாத அளவுக்கு சென்ற நிலையிலும் வெயில், மழை என எல்லா சூழலிலும் இந்த வீட்டிலேயே இவர்கள் வசித்து வந்தனர்.
இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் தெரிவித்தும் எந்த ஒரு பலனும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் சமூக ஆர்வலர் ஜோஸ்வா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக்கிராமத்திற்கு சென்றபோது மக்களின் அவலநிலையை கண்டு மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியுள்ளார். மேலும் அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு தமிழ்நாடு அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அதன் பலனாக முதல் கட்டமாக 5 தொகுப்பு வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது எனினும் தொகுப்பு வீடுகள் கட்ட முன் பணம் இருந்தால் மட்டுமே வீட்டு வேலைகள் ஆரம்பிக்க முடியும்.
இந்த சூழலில் நாதியற்று கிடந்தவர்களுக்கு 'நான் இருக்கிறேன்' என்று உறுதியளித்தார் ஜோஸ்வா. தனது நண்பர்கள் மூலம் நிதி திரட்டி முன்பணம் கொடுத்து கட்டடப் பணிகளை துவக்கி வைத்தார். அதே சமயம் அரசு சார்பில் 1.80 லட்சம் ரூபாய் மட்டுமே தொகுப்பு வீடுகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், அது செங்கல், மணல் வாங்குவதற்கு மட்டுமே போதுமனதாக இருந்தது. அப்போதும் கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாய் சேர்த்து நான்கு லட்சம் ரூபாய்க்கு ஒரு வீட்டை கட்டுவது என முடிவு செய்து 5 வீடுகளுக்கும் ஆகக்கூடிய செலவுகளை ஜோஸ்வா நண்பர்கள் உதவியுடன் ஏற்றுக்கொண்டு வீடுகளை கட்டி முடித்துள்ளார்.